அவள் முடி வெட்டிவிட்டுக்
கொண்டிருந்தாள்
வானொலியில் ஏதோ
ஒரு பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது
அவளின் முடி
தோள்களின் மேல்
தவழவிடப்பட்டிருந்தது
கூர்ந்து
பார்க்கையில் தான் தெரிந்தது
அது அவளின்
முடியல்ல என்று
அவளின் தலை முடி
சிரைக்கப்பட்டிருக்கிறது
அவளுக்குள் ஏதோ
ஒரு சோகம் புதைக்கப்பட்டிருக்கிறது
அது அழகு நிலையம்
என்பதால்
முடியற்ற
தலையுடன் வேலை செய்ய அனுமதி மறுக்கப்பட்டிருக்கக்கூடும்
இதுபோன்று எவ்வளவோ
மறுப்புகளை அவள் சந்தித்திருக்க வேண்டும்
விளைவாக முகத்தில்
ஒரு பாவனையும் இல்லை
அவளின் உதடுகள் மெலிதாக
வானொலியுடன்
அந்தப் பாடலை முணுமுணுத்துக்கொண்டிருந்தன
அதனூடே கொஞ்சம்
கொஞ்சமாக
அவள் சோகம்
கசிவதாகத் தோன்றியது.
