Friday, 15 November 2013

கையெழுத்து




காந்தி சிரித்துக்கொண்டிருந்தார். பாரதியார் முறைத்துக்கொண்டிருந்தார். வள்ளுவர் யாரையோ பார்த்துக்கொண்டிருந்தார். எல்லா வகுப்பறைகளையும் போல் தேசத்தலைவர்களும், காவியக் கவிகளும் தத்தம் வேலைகளை பார்த்துக்கொண்டிருந்தனர். மேலே பார்த்தால் மின் விசிறி ஓடுகிறது என்று கண்டுபிடிக்கலாம். வெளியே வெயில் சுள்ளிட்டது. மாணவர்களின் சத்தம் வெள்ள நேரத்தில் எழும் குற்றால அருவியின் ஓவென்ற சத்தத்தை முறியடிக்க பயிற்சி எடுத்துக்கொண்டிருப்பதாகத் தோன்றியது.
உணவு இடைவேளைக்குப் பின் மதியம் முதல் வகுப்பு தமிழ். அதற்குப் பதில் வேறு எந்த வகுப்பு நடந்தாலும், அதனால் இந்த உலகத்தின் இயக்கத்தில் எந்தவித மாற்றமும் நிகழப்போவதில்லை என்பதுபோல் மாணவர்கள் கதை பேசிக்கொண்டிருந்தனர். சிலர் முந்தைய நாள் பார்த்த சக்திமானைப் பற்றியும், சிலர் சூப்பர் மரியோவில் அடுத்த கட்டத்துக்கு செல்வதில் உள்ள கஷ்ட நஷ்டங்களைப்பற்றியும் மிகத்தீவிரமாக விவாதித்துக்கொண்டிருந்தனர். இதற்கு நடுவில் யாரையும் சட்டை செய்யாமல் மிக அமைதியாக வகுப்பறைக்குள் நுழைந்தார் தமிழ் ஆசிரியர். அவரது கையில் திருத்தப்பட்ட காலாண்டுத் தேர்வின் விடைத்தாள்கள். இப்பொழுது மின் விசிறியின் ஒலி மட்டுமே அந்த அறையை நிரப்பிக்கொண்டிருந்தது.
நாற்காலியில் அமர்ந்ததும் முதல் வேலையாக விடைத்தாள்களை கொடுக்கத் தொடங்கினார். மதிப்பெண் வாரியாக அல்லாமல் அகர வரிசைப்படி மாணவர்கள் அழைக்கப்பட்டனர். விடைத்தாள்களோடு, அதிக மதிப்பெண் எடுத்துவர்களுக்கு கைத்தட்டல்களும், மதிப்பெண் குறைந்தவர்களுக்கு வெறும் திட்டுகளும் கொடுக்கப்பட்டது. இப்பொழுது ஆசிரியரின் முகத்தின் புதிய வரவு ஒரு நக்கல் சிரிப்பு. அதன் வருகையினூடே அவர் அழைத்த பெயர் வசந்த். கடைசி பெஞ்சிலிருந்து தலையைக் குனிந்தபடியே முன்னால் வந்தான் வசந்த்.
அவனது பேப்பரை உயர்த்திக்காட்டியபடி,“ஸ்டூடன்ஸ், இந்த ஸ்கூல்லயே இதவிட மோசமான ஒரு கையெழுத்த நான் பார்த்ததே இல்ல. இதப் படிச்சுப் புரிஞ்சுக்கரதுக்குள்ள என்னோட முடியெல்லாம் நரச்சுடும் போல”. மாணவர்கள் மறுபடியும் அருவியின் பேரொலி முறியடிப்புப் பயிற்சியை தொடங்கினர். “இந்தா பிடி, இந்த கையெழுத்த வச்சு வாழ்க்கைல என்னத்த கிளிக்கப் போறீயோ.. இத நீயே ஃப்ரேம் போட்டு வீட்டில மாட்டி வச்சுக்க”.
      ஆட்டோகிராஃப் வாங்க முட்டிமோதிக்கொண்டிருக்கும் தன் ரசிகர்களுக்கு நடுவில் இதை நினைத்துக்கொண்டே கையெழுத்துப் போட்டுகொண்டிருந்தான் எழுத்தாளர் வசந்த்.