இந்த மழை நாளின்
மாலை வேளையில்
நாம்
அருந்திக்கொண்டிருக்கும்
இந்த தேநீர்
முடிந்தவுடன்
நமக்குள் உள்ள
எல்லாமும் முடிந்துபோய்விடும்
இருந்தும்
நீ அந்த தேநீரை
என்னிடம்
தந்தபொழுது
ஒரு சிறு தொடுதல்
நடந்தது
நம் இருவருக்கு
மட்டுமே பரிச்சயமான
ஒரு மிக அழகான
பாடல்
இப்பொழுது
ஒலித்துக்கொண்டிருக்கிறது
எதிரெதிரே
அமர்ந்திருக்கிறோம்
நான் உன்னைப்
பார்த்துக்கொண்டிருக்கிறேன்
உன் கண்கள் வேறு
எங்கோ நிலைகொண்டிருக்கிறது
இதுவரை கூறிய
சமாதானங்களுக்கு பதிலாய்
ஒரு வெற்றுப்
புன்னகையைத் தருகிறாய்
உன் கைக்கடிகாரத்தில்
அடிக்கடி நேரத்தைப் பார்க்கிறாய்
உன் தேநீருக்கு
நான் பணம் கொடுப்பதை மறுக்கிறாய்
உன்னிடம் எனக்கான
முக்கியத்துவம் குறைந்திருக்கக்கூடும்
மழை பெய்கிறது
அதை
ரசிக்கப்
பிடிக்கவில்லை
ஒரு உறவு
உடைவதால்
இந்த உலகின்
இயக்கத்தில்
எந்த ஒரு
மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்பதை
சுற்றம்
விளக்கிக்கொண்டிருக்கிறது
என்றுமே
ஒரு மனிதரை
இன்றுதான்
கடைசியாக
சந்திக்கப்போகிறோம் என்று
நினைப்பதில்லை
நினைப்பதில்லை
நான்
நாம் மீண்டும்
இணைவதற்கு உதவியாய் வரப்போகும்
அந்த அதிர்ஷ்ட
தேவதைக்காக
ஆறிக்கொண்டிருக்கும் ஒரு தேநீர்
கோப்பையுடன்
காத்துக்கொண்டிருக்கிறேன்.
