புத்தகம்: இதற்கு முன்பும் இதற்குப் பிறகும்
ஆசிரியர்: மனுஷ்ய புத்திரன்
பக்கங்கள்: 320
வாசிக்க எடுத்துக்கொண்ட நேரம்: தினமும் ஒன்றிரண்டு கவிதைகளாக சுமார்
இரண்டு மாதம்
ஒரு வரியில்: நாம் தினமும் சந்திக்கும் சாதாரண மனிதர்கள், தருணங்கள்
தான் இப்புத்தகத்தின் கவிதைகள்.
மனுஷ்ய புத்திரனின் எழுத்தின் வசீகரம் நம்
வாழ்வின் ஒவ்வொரு சந்திப்புகளையும், சந்தோஷங்களையும், இயலாமையையும்,
ஏமாற்றங்களையும், தவிப்புகளையும் கவிதைகளாக்கி இருக்கின்றன. இந்தக் கவிதைகள்
பயணிக்கும் பாதை நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இப்பாதையில் தென்படும் மனிதர்கள்
நமக்கு மிகவும் பரிச்சயமானவர்களே. இதன் சம்பவங்கள் ஏதோ ஒரு சமயத்தில் நம் வாழ்வில்
நடந்திருக்கக்கூடும். எந்த நிலையிலும் இவை நம்மை அந்நியப்படுத்துவதில்லை; நம்
கூடவே நடந்து வருகின்றன. பல இடங்களில் கவிதையின் சுவையைக் கூட்டுவது மழையின் சப்தமும்
தேநீரின் வாசனையும் தான். அனேகமாக
மழையையும் தேநீரையும் கொடுத்தால் மனிதர் ஒரு கவிதை இயந்திரம் ஆகி விடுவார் போல.
இதில் உள்ள பெரும்பான்மையான கவிதைகள் ஒரு பக்கத்திற்கும் மேலே இருக்கின்றன. அவை
தமக்குள் ஒரு விதமான கதை சொல்லலைக் கொண்டு கவிதைக்கேயுரிய கவித்தன்மையுடன்
முடிக்கப்பட்டிருக்கின்றன. எல்லாக் கவிதைகளும் எளிமையாய் இருப்பினும் சில கவிதைகள்
எந்த அர்த்தத்தில் எழுதப்பட்டது எனப்(எனக்குப்) புரியவில்லை. ஆனாலும் கவிதை
வாசிப்பிற்கு முதன்முறையாக வருபவனுக்கு தைரியமாக இவரின் கவிதைத் தொகுப்புகளைக்
பரிந்துரைக்கலாம்; நடையில் அவ்வளவு எளிமை. தினமும் காலை கல்லூரியோ அலுவலகமோ
செல்லும் முன் இதிலுள்ள கவிதைகளில் ஒன்றிரண்டு படித்துவிட்டு சென்றால் அந்த நாள்
கொஞ்சம் கவிதையாகவே செல்ல வாய்ப்புண்டு. என்ன, சில கவிதைகளால் நம் கால் தரையில்
இருக்காது. சிரிக்காதீர்கள், அனுபவித்துதான் சொல்கிறேன் நம்புங்கள். இப்புத்தகத்தை
படித்து முடித்தபொழுது சோலைகளுக்கு நடுவே ஒரு தெளிந்த நீரோடையில் சத்தமில்லாமல்
மிதந்து சென்றது போன்ற அனுபவத்தைக் கொடுத்தது.
இதில் எனக்குப் பிடித்த பல கவிதைகளில்
முக்கியமான ஒன்று இங்கே உங்கள் பார்வைக்கு.
பரஸ்பரம்
பண்டிகைக்கு முதல் நாள்
குழந்தைக்குப் புத்தாடை வாங்க
பணம் கேட்பவன்
குழந்தைக்கு உடல் நலமில்லை
எனப் பொய் சொல்கிறான்
கடவுள் அவனை
கொஞ்சம் மன்னிக்கிறார்
அவனும் கடவுளை
கொஞ்சம் மன்னிக்கிறான்

