Friday, 25 March 2016

முடிவு


அந்த சோகம்
தான் ஒரு
தற்கொலையில் முடிந்திடவோ
அல்லது ஒரு
கவிதையில் முடிந்திடவோ
சமமான வாய்ப்புகள்
இருப்பதாகக் கருதியது

Friday, 8 May 2015

கேள்விகள்


சில கேள்விகளை
அன்றே கேட்டிருக்கலாம்
அவை
“என்னை மன்னித்துவிடு”
என்பதோடு முடிந்துபோயிருக்கும்.

Monday, 23 February 2015

அழுகை


ஒரு உயிர் உருவாகும்போது
ஒரு உயிர் பிரியும்போது
ஒரு தோல்வியை ஏற்கும்போது
ஒரு வெற்றியை சுவைக்கும்போது
ஒரு மகிழ்ச்சியை உள்வாங்கும்பொழுது
ஒரு தூரோகத்தை எதிர்கொள்ளும்போது
ஒரு அலட்சியப்படுத்தப்படுதலை உணரும்போது
ஒரு அன்பு மறுக்கப்படும்போது
ஒரு காதல் தோல்வியுரும்போது
ஒரு நட்பு முறியும்போது
ஒரு தனிமை சூழ்ந்துகொள்ளும்போது

அழுகை அவற்றை வரவேற்கிறது.

Sunday, 21 September 2014

ஒரு உறவின் கடைசி சந்திப்பில்


இந்த மழை நாளின் மாலை வேளையில்
நாம் அருந்திக்கொண்டிருக்கும்
இந்த தேநீர் முடிந்தவுடன்
நமக்குள் உள்ள
எல்லாமும் முடிந்துபோய்விடும்

இருந்தும்

நீ அந்த தேநீரை
என்னிடம் தந்தபொழுது
ஒரு சிறு தொடுதல் நடந்தது

நம் இருவருக்கு மட்டுமே பரிச்சயமான
ஒரு மிக அழகான பாடல்
இப்பொழுது ஒலித்துக்கொண்டிருக்கிறது

எதிரெதிரே அமர்ந்திருக்கிறோம்
நான் உன்னைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்
உன் கண்கள் வேறு எங்கோ நிலைகொண்டிருக்கிறது

இதுவரை கூறிய 
சமாதானங்களுக்கு பதிலாய்
ஒரு வெற்றுப் புன்னகையைத் தருகிறாய்

உன் கைக்கடிகாரத்தில் அடிக்கடி நேரத்தைப் பார்க்கிறாய்
உன் தேநீருக்கு நான் பணம் கொடுப்பதை மறுக்கிறாய்
உன்னிடம் எனக்கான முக்கியத்துவம் குறைந்திருக்கக்கூடும்

மழை பெய்கிறது
அதை
ரசிக்கப் பிடிக்கவில்லை

ஒரு உறவு உடைவதால்
இந்த உலகின் இயக்கத்தில்
எந்த ஒரு மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்பதை
சுற்றம் விளக்கிக்கொண்டிருக்கிறது

என்றுமே
ஒரு மனிதரை இன்றுதான்
கடைசியாக சந்திக்கப்போகிறோம் என்று
நினைப்பதில்லை

நான்
நாம் மீண்டும் இணைவதற்கு உதவியாய் வரப்போகும்
அந்த அதிர்ஷ்ட தேவதைக்காக
ஆறிக்கொண்டிருக்கும் ஒரு தேநீர் கோப்பையுடன் 
காத்துக்கொண்டிருக்கிறேன்.

Sunday, 26 January 2014

மழையில் நனைந்த புத்தகங்கள்

புத்தகங்கள்
மழையில் நனையும்பொழுது
கொஞ்சமாகவேனும் பதட்டமடைகிறோம்

சில மணி நேரமேனும்
நம் வாழ்வின்
அத்தியாவசியத் தேவைகளை மறந்து
கடமைகளில் இருந்து தவறி
அமைதியிழந்து
அதன் ஈரத்தை உலரவைக்க முற்படுகிறோம்

வெயிலில்
மின் விசிறிக்கு அடியில்
அறையின் வெம்மையில்
இன்னும் ஏதேதோ வழியில்
முயற்சித்துக் கொண்டிருக்கிறோம்

அவற்றை
மழையில் நனைந்த
நம் உடலைப்போல்
எளிதாய்த் துவட்டி விட முடிவதில்லை

ஈரங்கள் உலர்ந்த பின்னும்
உடம்பில் பட்டத் தீக்காயம் போல
என்றும் அந்த ரணத்தை
சுமந்தலைகின்றன

வாசிப்பவனுக்கு
அதன் பக்கங்களின்
மேடுபள்ளங்கள்
உறுத்திக்கொண்டே இருக்கிறது

அதைப் பார்க்கும்பொழுதெல்லாம்
ஒரு தீரா சோகம்
என்றோ நடந்த துரோகம்
யார் மீதோ ஒரு அர்த்தமற்ற கோபம்
நம் மனதில் வந்து செல்கிறது

அதன் இருப்பு
ஒரு சிறு துயரச் சம்பவத்தின்
அடையாளச் சின்னமாய் அமைகிறது

அதனை மறக்க
எவ்வளவோ முயல்கிறோம்
ஆனால் என்றுமே
நம் இயலாமைக்கு
ஒரு சிறந்த எடுத்துக்காட்டாய்
நம்மைப்பார்த்து
சிரித்துக் கொண்டே வாழ்கிறது
மழையில் நனைந்த புத்தகங்கள்.