Monday, 30 September 2013

இலக்கணம் தவறிய கவிதை



ஒரு வழியாக
கவிதை என்று நினைத்து
அவளைப் பற்றி ஒரு கவிதையை எழுதி முடித்தேன்
எதற்கும் இருக்கட்டுமே என்று நண்பனிடம் காட்டினேன்
இது எழுத்துப் பிழைஇது சந்திப் பிழை, இது.. 
பாவி,
நான்கு வரிகளில் நாற்பது பிழைகளைக் கண்டுபிடித்துவிட்டான்
இலக்கணம் தெரியாத நீயெல்லாம்
ஏன் கவிதை எழுதுகிறாய் என்று கேட்டும் விட்டான்
பரவாயில்லை..
இலக்கணம் தவறியிருந்தாலும் எடுத்துச் சென்று காட்டினேன் அவளிடம்
முழுவதும் படித்துவிட்டு,
ஒரு கோணல் சிரிப்பைப் பதிலாக அளித்தாள்!
எவன் சொன்னான்
கவிதைக்கு இலக்கணம் வேண்டும் என்று.


Tuesday, 24 September 2013

வீதியில் சந்தித்த ஒரு பார்வை


வீதியில் நடந்து செல்கையில்
தற்செயலாகத்தான் பார்த்தேன் அப்பெண்ணை
தனக்கு வீடில்லை என
ஒரு தட்டியில் எழுதி தெரியப்படுத்துகிறாள்
சத்தியமாக இதற்குப் பின்னே ஒரு கதை இருக்கும்
அதைத் கேட்டுத்
தாங்கும் சக்தி தான் எனக்கில்லை
அவளைக் கடந்து செல்கையில்
குழப்பத்துடனே ஓரக் கண்ணில் பார்க்கிறேன்
கேட்டிருந்தால்
ஒரு கதையோடு போயிருக்கும்
இப்பொழுது பார்வையிலேயே சொல்கிறாள்
ஓராயிரம் அமைதியிழக்கச் செய்யும் கதைகளை